Friday, November 11, 2011

வல்லமை தாராயோ…

பயன்தர தக்க இலக்கை முதலில் தீர்மானித்து விட்டால் நம்பிக்கை தானாக பிறக்கும். அதுதான் வல்லமை. அடுத்த படி என்ன? தொடர்ந்து அதைப் பற்றிய கனவு. எண்ணிக் கொண்டே இருப்பது.

திட்டமிட்ட இலக்கை நோக்கி அடுத்த பயணம். அதைப் பற்றி தொடர்ந்து எண்ணுவது இடைவிடாமல் சிந்திப்பது. ஒன்றைத் தொடர்ந்து பார்க்கிற பார்க்கிற பார்வை கூர்த்த பார்வை. ஆழமாக அழுத்தி ஒன்றை மனதிற்கு சொல்லி விட்டீர்களென்றால் அது தொடர்பான விஷயம் எங்கோ ஓர் கூட்டத்திற்கு நடுவில் நடந்தால் கூட அதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

கூர்த்த பார்வை என்பது இலக்கை நிர்ணயித்து ஆழப்படுத்தி விட்டால் தானாய் வந்துவிடும். தேடிப் போக வேண்டியதில்லை. இருக்கிற இடத்திலேயே மிகப் பரந்த கூட்டத்திற்கு நடுவிலே கூட உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் உங்கள் கண் பார்க்கும். அதையே காதும் கேட்கும்.

துணிந்து நாம் எடுக்கிற முடிவு அந்தப் பாதையில் நாம் வைக்கிற முதல் அடி. அதுதான் முக்கியம். மனிதன் பெரிய பாறாங்கற்களால் இடறி விடுவதில்லை. பெரிய பாறையால் தடுக்கி விழுந்துவிட்டான் என்ற செய்தி உண்டா? கிடையாது. சிறு சிறு கற்கள்தான் நம்மை இடறச் செய்கின்றன. சிறுசிறு தடைகள்தான் நம்மை கவிழ்த்து விடுகின்றன. அந்த சிறு தடைகளால் வருகிற பயம்தான் பெரிய தடையை கடக்கிறவரை நாம் பயணிப்பதே கிடையாது. முதலடி எடுத்து வைக்கிற துணிவு அந்த முதல் நம்பிக்கை வந்து விட்டதென்று சொன்னால் எதையுமே சாதிக்கலாம்.

துணிந்த தொடக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த இடத்தில்தான் மனிதர்கள் தோற்றுப் போகிறார்கள். அவநம்பிக்கை அடைந்து விடுகிறார்கள்.

தொடரும் முயற்சி எப்படி வருமென்று கேட்டால் பெரிய விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டால் மனது அதையே பூதாகரமாக கற்பனை செய்து கொண்டிருக்கும். அடையும் இலக்கின் பரிமாணத்தை மனது எண்ணி யெண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் தளர்ச்சி வரும், தடை வரும், எதிர்ப்பு வரும், எதிர்மறை சிந்தனைகள் தலையெடுக்கும். அதை உதறி எறிந்துவிட்டு போக வேண்டு மென்றால் இலக்கின் பரிமாணத்தை சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்கை நோக்கிய பயணத்தை ஒரே மூச்சில் போகிற பயணமாக முடிவு செய்யக் கூடாது. அதை சிறுசிறு பகுதியாக இன்றைக்கு இதை செய்ய வேண்டும். நாளைக்கு அதை செய்ய வேண்டும் என்று அதை உடைத்து சிறியதாக மாற்றுகிற போது மனதிலிருக்கிற அச்சம் நம்மை விட்டுப் போகும். உங்கள் முன்னால் வைக்கப் படுகிற தடைகளை நீங்கள் துணிந்து கடப்பதற்குரிய நம்பிக்கையை அது உங்களுக்குத் தரும். இன்னும் சொல்லப்போனால் அது வெற்று விமர்சனங்களையும் வேண்டாதவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளையும் இந்தப் பயணத்தின் இந்த நேரத்தில்தான் வந்து சேரும். வேண்டாத விமர்சனங்கள் வரும். இவன் இதைச் சாதித்து விடுவானா என்ற குரல் நம் காதிலே கேட்கும். விமர்சனங்களால் விழுந்து போகாத இதயத்தை வசப்படுத்திக் கொள்கிறானோ எந்த மனிதனுக்கு அது வாய்க்கிறதோ அவன் சாதனையாளனாக முடியும். விமர்சனங்கள் வராத மனிதன் கிடையாது. வந்தே தீரும். தொடர்ந்த முயற்சியில் அந்தத் தடையை தாண்டிச் செல்கிறபோது மனது தளரும். பாதையில் தடை வருகிறபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடலிலிருந்து நீரை முகர்ந்து முகர்ந்து மீண்டும் மழை பொழிவதைப்போல மீண்டும் நம்பிக்கை எனும் நீரை முகர்ந்து முகர்ந்து இதயத்தில் பாய்ச்ச வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

வருகிற தடைகள் அவை தருகிற துன்பங்கள் நமக்கு வருகிற தளர்ச்சி அவை அத்தனையும் நீங்கிப் போகும். ஏனென்றால் இலக்கும் சரியாக இருந்து அதைப் பற்றிய எண்ணமும் சரியாக இருந்து போகிற அந்தப் பாதையில் கால் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டால் எதுவும் தடையாகத் தெரியாது. உங்கள் பயணம் தொடர்ந்து நடக்கும். இலக்கை தீர்மானித்துவிடலாம். ஆனால் இலக்கை நோக்கிப் பயணிக்கிற கால அளவை மட்டும் நம்மால் தீர்மானிக்கமுடியாது. வெற்றிக்கு நாம் தீர்மானம் செய்த காலம் கொஞ்சம் நீட்டிக்கலாம். இரண்டு வருடத்தில் முடிக்கலாம் என்று நினைத்தது மூன்று வருடமாகலாம். அல்லது முயற்சியின் காரணமாக முன்கூட்டியே கூட முடிவைத் தந்துவிடலாம். எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம். காலையிலிருந்து எத்தனை பேரிடம் வளவளவென்று பேசிமுடித்து அவர்களும் சலித்து போய் நாமும் சலித்து எழுந்து விடுகிறோம். அந்த நேரம் எதற்குரிய நேரம். எத்தனை பெரிய காரியங்களை ஆற்றுவதற்குரிய நேரத்தை எப்படி தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்கிற சிந்தனையை வளர்த்துக் கொண்டோமேயானால் சாதனைகள் தொடர்ந்து வரும்.

நம்மால் முடியும் என்று நம்மை வலியவனாக எண்ணிப் பார்க்கிற கற்பனை வருகிறபோது அது வலிமையைத் தரும். இலக்கை நோக்கிய பயணத்தில் இலக்கை பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கின் பரிமாணத்தை எளிதாக கற்பனை செய்கிற இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உந்தும் சக்தியாக உங்கள் உள்மன உரையாடல்கள் உங்களை வலிமையுடையவர்களாக ஊக்கப் படுத்துகிற அதே வேளையில் நீங்கள் சென்று சந்திப்பதாக நீங்கள் அடைய விரும்பியதாக எதை நீங்கள் தீர்மானமாக இலக்காக வைத்திருக்கி றீர்களோ அந்த இலக்கின் பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் நீங்கள் பழகிக் கொண்டால் எளிதாக முடியும்.


No comments:

Post a Comment