Saturday, November 12, 2011

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!


நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே இருக்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். ஐன்ஸ்டீன் போன்ற மாமேதைகளே தங்கள் மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் வரை தான் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால் மனிதன் தன்னால் என்னவெல்லாம் முடியும், முடிவதும் எந்த அளவு முடியும் என்பதை அறியாதவனாகவே வாழ்ந்து மரிக்கிறான். இதில் தாழ்வு மனப்பான்மை என்ற கொடுமை வேறு அவனை சில நேரங்களில் ஆட்டிப் படைக்கின்றது.

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை.

உயர்த்திக் கொள்வது என்பது கர்வப்படுவது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல. அது தன்னைத் தானே உயர்வாகச் சொல்லிக் கொள்வதல்ல. நம் திறமைகளையும், சக்திகளையும் உயர்த்திக் கொள்வதே உண்மையான உயர்த்திக் கொள்ளல். நம் திறமைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே செல்வது தான் உயர்த்திக் கொள்ளல். எந்த சூழ்நிலையும் நம்மைக் குறைத்து விட அனுமதிக்காமல் நிமிர்ந்து நிற்பது தான் உயர்த்திக் கொள்ளல். அதெல்லாம் அபூர்வமான சிலருக்குத் தான் முடியும் என்று மட்டும் சொல்லி உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஹெலன் கெல்லரும், நிக் வூயிசிச்சும் கூடத் தங்களைக் குறைத்து எண்ணி விடாமல் இருக்கையில் அவர்களைக் காட்டிலும் நல்ல நிலையில் பிறந்த நாம் நம்மைக் குறைத்துக் கொண்டால் அது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகத் தான் இருக்கும்.


No comments:

Post a Comment